Monday, 21 January 2013

சிவப்பு அரிசியின் மகிமை

Subscribe to send our Latest Tamil Posts to your E-mail inbox. Activate your subscription via a confirmation link sent to the email.

Subscribe to send our Latest Tanglish Posts to your E-mail inbox. Activate your subscription via a confirmation link sent to the email

சிவப்பு அரிசியின் மகிமை

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?
ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரைஎன்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் -  மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்   திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும்    (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிஎன்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!

மழைக்காகிதம்

Random Posts..

Powered by Blogger.